Please log in to access more features!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலில், தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது. இத்தலத்தில், முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.
சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான 4-ஆவது தலமாகத் திருவாலவாய் உள்ளது.[2] இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும்.[2] அதனால், சிவபெருமானுடைய முக்தித் தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தினைச் 'சிவன் முக்திபுரம்' என்றும் அழைக்கின்றனர்.[2] இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும்.[2] இதனை, இராசமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர்.[2] இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274-ஆவது சிவாலயமாகவும், 192-ஆவது தேவாரத்தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
வரலாறு
விருத்திராசூரனைக் கொன்றமையால், இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோசம் நீங்க, கடம்பவனத்தில் இருந்த இந்தச் சிவலிங்கத்தைப் பூசித்துத் தனது தோசத்தைப் போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.
முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், சிவபெருமான் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில், அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
கோயிலின் அமைப்பு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில், எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
இத்திருக்கோயில், கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில், நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய, நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன. இவற்றுள் இராச கோபுரம் (கிழக்குக் கோபுரம்) பொ.ஊ. 1216 முதல் 1238 ஆண்டு பிற்கால பாண்டியர்களாலும், மேற்குக் கோபுரம் பொ.ஊ. 1323 ஆம் ஆண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியனாலும், தெற்குக் கோபுரம் பொ.ஊ. 1559 ஆம் ஆண்டில் மன்னர் விசுவநாத நாயக்கராலும், வடக்குக் கோபுரம் பொ.ஊ. 1564 முதல் 1572 ஆம் ஆண்டில் மன்னர் முத்துவீரப்ப நாயக்கரால் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் பொ.ஊ. 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.